×

பெட்ரோல் பங்க்குகளுக்கு உரிமம் வழங்குவதற்கு முன்பு பெட்ரோலியம், வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு ஆய்வு செய்ய வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெட்ரோல் பங்க் உரிமம் வழங்குவதற்கு முன் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் பாதுகாப்பு அமைப்பு நேரில் ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் தாக்கல் செய்துள்ள மனுவில், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அதற்கான இடங்களில் அமைக்கப்பட வேண்டும். எண்ணெய் கசிவுகளால் புற்றுநோய் மற்றும் மூளை தொடர்பான நோய்கள் வர வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் பல பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து தடையில்லா சான்று வழங்கியதாக போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பிடம் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. அதனால் மத்திய அமைப்பு நேரடி ஆய்வு செய்த பின்னரே உரிமம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிகளின் படி மாநில அரசு நேரடி ஆய்வு செய்ய வேண்டும்.

ஒன்றிய அரசு அமைப்பு ஆவணங்களை ஆய்வு செய்து உரிமம் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வழக்கறிஞர் ஆனந்த் நடராஜன் ஆஜராகி உரிய அனுமதி பெற்றே விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார். இதையடுத்து நீதிபதிகள், மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் அதை கருத்தில் கொண்டு உரிமம் வழங்குவதற்கு முன்பு மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் பாதுகாப்பு அமைப்பு ஆவணங்களுடன் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

சந்தேகம் உள்ள விற்பனை நிலையங்களை மட்டும் ஆய்வு செய்யலாம். மாவட்ட நிர்வாகத்தால் தடையில்லாத சான்று பெற்ற நிறுவனங்களின் உண்மை தன்மையை மீண்டும் ஆய்வு செய்யலாம். மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் படி வருவாய் அதிகாரிகள் கட்டாயம் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

The post பெட்ரோல் பங்க்குகளுக்கு உரிமம் வழங்குவதற்கு முன்பு பெட்ரோலியம், வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு ஆய்வு செய்ய வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Petroleum, Explosives Safety Organization ,Union Govt. ,CHENNAI ,High Court ,Central Petroleum and Explosives Protection Agency ,VPR Menon ,Madras High Court ,Union Government ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...